தாய் மாமன்
முத்தாசாரிக்குத் தெரிந்த
பத்து வயது சிறுவன் அவன்
நீண்டநாட்களுக்குப்
பின் வந்திருந்தான்
எல்லாம் நல்ல விசயம்தான்...
அவனின் அக்காளுக்குப்
பெண்பிள்ளை பிறந்துள்ளதென
அறிந்து வந்துள்ளான்
என்பதையறிந்த முத்தாசாரி
'ம்... தாய்மாமனா ஆயிட்ட
மருமகளுக்கு என்னடா வாங்கியாந்த...?'
கேட்ட நிமிடத்தில்
'இதோ அண்ணாச்சி...' எனத்
தன் டவுசர் பையிலிருந்து
பிஸ்கட் பாக்கெட் ஒன்றை
எடுத்துக் காட்டிய
சிறுவனுக்குத் தெரியாது
பிறந்த குழந்தை
பிஸ்கட் சாப்பிடாது என்று
ஆனால்
முத்தாசாரியின் கண்களில்
சட்டெனக் கசிந்த
நீர்த்துளிகளுக்குத் தெரிந்தது
தாய்மாமன் எனும் உணர்வு
இன்னும் உயிர்ப்புடன்தான்
இருக்கிறதென்று...!
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.