விவசாயத்தை மீட்டெடுப்போம்!
முப்போக நிலமுடையார் போகி
நிலமதில் வியர்வை சிந்தும்
உழவருக்குத் திருநாள்
உழவுக்கு உதவும் எருதுக்கு ஒரு விழா
உறவினர், நண்பர்கள் கண்டு
உண்டு களித்திட காணும் பொங்கல்
திமிராய்த் திரியும் வாலிபர்
திமிறித் துள்ளும் காளையின்
திமிலைப் பிடித்து அடக்கும்
தீர விளையாட்டு
வரிசையாய்க் கொண்டாடி
வசதியாய் வாழ்ந்த தமிழகம்
வறட்சி சூழ்ந்து வளமிழந்தது எதனால்?
சேற்றில் புதைந்த பாதத்தில்
வெடிப்பு ஏற்படுவது பெருமை
வெடித்த வறண்ட நிலம் பார்த்து
மாரடைக்கும் நிலைமை கொடுமை
இயற்கை கொட்டிக் கொடுத்ததை
கட்டிக்காப்பது அரசின் கடமை
தமிழக விவசாயம்
சாகுபடி பொய்த்தது
சாகும்படி ஆனது
வரும் சந்ததிக்கு
மண்ணின் மணம் தெரியுமா?
மண்ணிலுள்ள
உணவுப் புதையல் கிடைக்குமா?
விழித்திடுவோம்
விவசாயத்தை மீட்டெடுப்போம்!
-விஷ்ணுதாசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.