உற்றுப் பாருங்கள் !
பண்பாட்டுப் பண்டிகையது
எங்கள் பாரம்பரியப் பொங்கல் இது
செய்யும் தொழில் தான்
தெய்வமென்பதை உணர்த்த
உழைத்தவர்கள் கொண்டாடிய
உழைப்பின் பண்டிகை பொங்கல்.
நான்கு நாள் கொண்டாடினர்
நாடே மகிழ்ச்சியில் துள்ளியது
வேண்டாதவை எல்லாவற்றையும்
போகியில் பொசுக்கினார்
பொங்கலில் பொங்கியது
உழைத்தவனின் உள்ளம் நிறைவாய்!
மாடா? மனிதனா? வேறுபடுத்தவில்லை
இருவரும் ஒன்றாய் உழைத்ததால்
இணையாய் மாட்டுப் பொங்கல்
இதிலுள்ள உண்மையைப் புரியாமல்...?
பிள்ளையாய், நண்பனாய்ப்
பழகி வந்த காளைகளுடன் விளையாடுவதை
மிருகவதை என்று கட்டுவதா கதை...?
காட்சி விலங்காக்க அது காட்டு விலங்கல்ல
எங்கள் உழைப்பில் பங்கு கொண்டு
எங்களுடன் சேர்ந்தே இருக்கும்
எங்கள் வீட்டின் செல்லம் அது!
எங்கள் வீட்டின் செல்வம் அது!
காளையும் காளையரும் மோதுவதால்
துன்புறுத்துகிறோம் என நடிப்போரே
உற்றுப் பாருங்கள் ஒரு நிமிடம்
காளை ஓடுவது பயந்து அல்ல
வெற்றிக் களிப்பில் என்று புரியும்!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.