உழவுத் தொழிலை வணங்கிடுவோம்
உழவுத் தொழிலை வணங்கிடுவோம்
உழவர் உயர முனைந்திடுவோம்
பழகும் இயற்கை வளங்கலெலாம்
பாது காக்க முயன்றிடுவோம்
மழையை வேண்டி மரம்நடுவோம்
மழைநீர் காக்கப் பழகிடுவோம்
உழைப்பின் உறுதி புரிந்திடுவோம்
உழைத்துப் பிழைக்க இணங்கிடுவோம்.
கற்ற கல்வி பயன்பெறவே
கண்ணாய் நாட்டிற் குழைத்திடுவோம்
உற்ற துணையாய்ப் பெற்றோர்க்கே
உதவி நின்று மகிழ்ந்திடுவோம்
பெற்ற செல்வம் பகிர்ந்திடுவோம்
பெரும்பே றாக நினைந்திடுவோம்
எற்றைக் குமிதை எண்ணிடுவோம்
என்றும் இதுபோல் நடந்திடுவோம்.
பொங்கும் பொங்கல் நலங்காட்ட
பூரிப் பினிலே கொண்டாடி
செங்க ரும்பின் சுவையாக
சிரிக்கும் இனிப்பில் சிறந்திடுவோம்
மங்க லங்கள் தங்கிடவே
மகிழ்வோம் விவசா யிகளெலாம்
எங்கும் இனிதாய் வாழ்தற்கே
இனியோர் விதிசெய் திடுவோமே!
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.