தற்கொலைக்கும் அஞ்சுபவன்
கண்டுகொள்ள யாருமில்லையென்ற
உங்கள் கணிப்பு சரியானது தான்
என்றாலும்
நீங்களென்னை வெளியே தள்ளுவதில்
எனக்கு எந்த நியாயங்களும் தெரியவில்லை...?
சித்ரவதைகளை ரசிப்பதில் உங்களுக்கு
ஆர்வம் இருக்குமென்றாலும்
நான் மட்டுமே உங்கள் விருப்பப்பட்டியலில்
இருப்பதுதான் எனக்கு குழப்பமாக உள்ளது
மூன்றாம் வீட்டில் வசிப்பவனின்
திறமைக்கு எந்த விதத்திலும்
சரிவராதது தான் என் நிலைமையென்பதை
நானே ஒப்புக்கொண்டதற்கு மேலும்
என்னிடம் இன்னும் உங்களுக்கு
என்ன வேண்டியதாய் இருக்கிறது...?
ஒரு டீக்கான நிச்சயம் கூட
இல்லாதவனின் கையலாகாத் தனத்தின் மீது
குத்திக்காட்டுவதில் இருக்கும் இன்பம்
ருசிகரமானதே என்றாலும்
அவன் கேட்பது கொஞ்சம் இடைவெளி
மட்டும் தான்
ஒன்றுக்கும் லாயக்கற்றவர்கள்
தற்கொலைகள் செய்யும் போது
இவன் அதற்கும் பயந்தவனாக இருப்பது
உங்களுக்கு அவன் மீது
இளக்காரம் செய்வதற்கான
இன்னுமொரு காரணம் கிடைத்து விடுகிறது.
- ஞா. தியாகராஜன், மதுரை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.