இசையமுது
இசையால் மயங்காமல் இவ்வுல குண்டோ
அசையும் அசையா அனைத்தும்... பசையெனக்
கண்ணில் உயிரோசை காட்டும் பரவச
எண்ணம் இயக்கிடும் ஏழிசை... பண்ணும்
தரும்நல் அமைதி தவழும் மனதை
வருடி இசையமுது வார்க்கும்... உருவாய்
பிறந்து உலகாளும் பிஞ்சுள்ளம் தன்னை
மறந்து கவலை மயக்கம்... துறந்திட
புத்துணர்வு பெற்றுதான் பூவிலகில் வாழ்ந்திடுமாம்
எத்திக்கும் வென்றிடும் ஏழிசையில்... பத்திரமாய்!
இன்னிசை வித்தகத்தை ஈட்டினால் பேராக்கத்
தன்மைகள் ஏழ்பிறப்பைத் தாங்கிடும்... வன்மை
பொறுப்புகளும் தந்தமைதி போதனையும் ஊட்டி
வறுமையது அண்டினாலும் வாழ்வில்... வெறுப்பூட்டா
வாசலென நிம்மதி வாகாய்த் தருமிந்தப்
பாசமுள்ள இன்னிசைப் பற்று!
- நாகினி, துபாய்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.