ஆதலினால் காதல் செய்வாய்!
ஈரைந்து மாதங்கள் கருவினில் சுமந்து
கண்ணின் இமையாய்க் காத்திட்ட அன்னையையும்
கஷ்டம் எதுவும் தெரியாமல்
நம் இஷ்டப்படி வளர்த்திட்ட தந்தையையும்
மனம் மகிழக் காதலித்திட
இந்தக் காதலர் தினத்தில் உறுதியேற்போம்!
பயனற்ற மண்ணாய் இருந்த நம்மை
பொற்பாத்திரமாய்ப் படைத்து நல்
கல்வியையும் தந்திட்ட
இரண்டாம் பெற்றோராம் ஆசிரியர்களை
இதயத்தில் வைத்துக் காதலித்திட
இந்தக் காதலர் தினத்தில் உறுதியேற்போம்!
அம்மா என்று அழைத்த மொழி
யாரும் கற்றுத்தராமல் பேசிய மொழி
உயிருக்கு இணையான தாய்மொழி
செம்மொழியாம் தமிழ் மொழியை
உயிராய் நாளும் காதலித்திட
இந்தக் காதலர் தினத்தில் உறுதியேற்போம்!
மூச்சு விடக் காற்றையும்
உயிர் வாழச் சோற்றையும்
நோய் நெருங்காப் பாதுகாப்பையும்
குறைவின்றி நாளும் தந்திடும்
இயற்கையை என்றும் காதலித்திட
இந்தக் காதலர் தினத்தில் உறுதியேற்போம்!
பெற்றோரிடம் பாசம் காட்டி
ஆசானிடம் நேசம் காட்டி
அன்னைத் தமிழை தினமும் போற்றி
இயற்கையை நாளும் நேசிக்கும் உன்னை
எந்தப் பெண்ணும் காதலிப்பாள்
ஆதலினால் காதல் செய்வாய்...!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.