குறையில்லா வாழ்வருள்வாய்!
பன்னிருகை வேலவனே
பழனிமலை சுவாமியே வா!
காவடிகள் சுமந்து வந்தோம்
பக்தர்கள் நெஞ்சமதில் அமர்ந்திடுவாய்!
யானை முகன் சோதரனே
பச்சைமயில் வாகனனே!
பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தோம்-எங்கள்
பாரங்கள் இறக்கி வைப்பாய்!
கொஞ்சிக் கொஞ்சித் தமிழ்பேசும்
கிள்ளைமொழி பாலகனே
கோலமயில் குறத்தி மகள்
கொஞ்சும் அழகன் முருகனய்யா!
பக்தர் குறை தீர்ப்பதற்கு
மலை இறங்கி வருபவனே!
ஞானத்தாய் பெற்றெடுத்த
ஞானகுரு நீயல்லவா..!
காவடிகள் சுமந்து கொண்டு
காவடிசிந்து பாடிக்கொண்டு
படியேறி தரிசனம் கண்டோம்
மனதார வணங்கி நின்றோம்!
சந்தனம் மணக்க வரும்
அரோகரா கோஷமதை
ஆறுமுகம் ஏற்றிடுவான்-எங்கள்
ஐம்புலன் ஆட்சி செய்வான்!
தாய் தந்தை உனக்குண்டு
அண்ணன், தம்பி உறவும் உண்டு
ஆறுபடை வீடுடைய முருகனுக்கு
அன்புசொல்ல துணைவியர் இருவருண்டு!
பால்காவடி ஏற்று நீயும்
பாவங்கள் விலக்கிடுவாய்
பன்னீர்க்காவடி ஏற்று நீயும்
பெருமைகள் சேர்த்திடுவாய்
வேல்காவடி சுமந்து வந்தோம்
வெற்றிகள் குவித்திடுவாய்!
குருநாதன் உதித்த தினம்
தைப்பூசத் திருநாளாம்
எங்கள் குரு குமாரசாமி
குறையில்லா வாழ்வருள்வாய்!
-விஷ்ணுதாசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.