வேம்பார்
ஆற்றின் கரையோரம்
அடர்ந்த வேப்பமரம்
அங்கு வந்த பாண்டியர்க்கு
வேப்பம்பூ ஆரம் செய்து
அணிவித்த காரணத்தால்
வேம்பாரம் மருவிப் பின்
வேம்பார் ஆனதுவே.
கலியுகக் கற்பக தரு
தமிழக அரசு மரம்
பனை நிறைந்த வேம்பார்
கருப்புக்கட்டி என்றாலே
கண்முன்னே ஓடி வரும்
இனிப்பான வேம்பார்.
இயேசுவின் திருமறையை
அலைவீசும் கடலோரம்
அற்புதப் போதனையால்
போதித்த சவேரியாரும்
தங்கிப் புதுமை செய்து
தூய ஆவிக் கோவிலமைத்த வேம்பார்.
தமிழ் அச்சுத் தந்தை
அன்றிரிக்கு பாதிரியார்
பணி செய்த ஊர் இது
தேம்பாவணி தந்து
தமிழ்முனியாய் வாழ்ந்த
வீரமாமுனிவர் தங்கி
பணி செய்த பங்கு வேம்பார்.
சிவபெரும் குன்றமென
குன்றாப் பெருமையோடு
நாடார்கள் வழிபட்ட
ஐய்யங்கோவில் உள்ள
அழகான வேம்பார்
நாயக்கர் சண்டையாலே
அன்று விருதுநகருக்கு
இடம் பெயர்ந்து சென்றாலும்
இன்று வரை அவர்களுக்கு
குலதெய்வம் இந்த
வேம்பாத்து ஐய்யன் தான்.
பனைத் தொழில் போலே
கடல் தொழிலுமே
இரு கண்ணாம் மக்களுக்கு
கடலுணவு ஏற்றுமதியில்
உயர்ந்த சாதனையை
எட்டிப் பிடித்தவர்கள்
பிறந்து வளர்ந்த வேம்பார்
தூத்துக்குடி மாவட்டத்தின்
எல்லையாய் அமைந்த வேம்பார்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.