வயதாகிறது...
குச்சி தின்ற பால்வாடி போயிற்று
மணல்வீடுகள் இடிக்கப்பட்டுவிட்டன
வாலில் சுற்றிய நூல்களை
அறுத்துப் பறக்கிறது தட்டான்கள்
சொட்டாங்கல்லினை அலகில் கவ்வி
பறக்கிறது காலம் திண்ணும் பறவை
பால்யத்தின் பேய்கள் செத்துவிட்டன
நிறம் மாறுகிறது காலம்
காரைகளைப் புதுப்பித்துக் கொள்கிறது வீடு
ஏதோ ஒன்றிற்காக
ஏதோ ஒரு இடத்துக்குச்
செல்லும் பயணங்களில்...
ஏதோ ஒன்று இடறுகிறது
உப்பரிந்த நினைவுகளில்!
உடைந்த பொம்மைகளின் சுடுகாடு
எங்கிருக்கும்...
வண்ணங்கள் மழுங்கி
பிழைப்புக்குத் தயாராகையில்
அழகான வேலைப்பாடுகள் நிறைந்த
ஒரு பூ ஜாடியாக ஆகிருப்போம்
கண்காட்சியில் வைக்க...!
- ஞா. தியாகராஜன், மதுரை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.