வெளிநாட்டு வேலை!
மனைவியையும்
பார்க்க முடியவில்லை...
நான் பெற்ற
மழலையையும்
பார்க்க முடியவில்லை...
ஊர்க்காரர்களுக்கு,
அவனுக்கென்ன
வெளிநாட்டில்
சம்பாதிக்கின்றான்...
நான்காண்டு
திருமணவாழ்வில்
நான்,
நான்கு மாதம்தான்
வீட்டிலிருந்திருக்கின்றேன்...
வாங்கிய கடனை
வட்டியுடன்
கட்டுவதற்கே
இரண்டாண்டுகள் முடிந்து விட்டன...
நான்
அருகிலில்லாமல்
மனைவியின் வளைகாப்பு,
மனைவியின் பிரசவம்...
புகைப்படமும்
தொலைபேசியும்தான்
தந்தையென்கின்றது
என் குழந்தை...
கணவன்
நாளுக்கொருமுறையேனும்
வீடுவரவேண்டும் - ஆனால்
நான்
நாட்டிற்கே
ஒருமுறைதான் வருகின்றேன்...
வீடு கட்டும்
கனவுக்குத்தான்
வெளிநாடு வந்தேன் - ஆனால்
நான்
வீடும் கட்டவில்லை
வீட்டிலும் வாழவில்லை...
சிறை வாழ்வென்பதா?
இல்லை
அடிமை வாழ்வென்பதா?
நாட்டிற்காகவல்ல
நாங்கள்
வீட்டிற்காக எல்லைகாக்கும்
ஏழ்மை வீரர்கள்...
- சடையன் பெயரன், இராசேந்திரப்பட்டிணம், விருத்தாச்சலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.