கனவும் கானலாய்...
தினமொரு நாடக வாழ்க்கை
மனமதில் அமைதி குலைந்து
கனவுகளும் கசியும் குருதியாய்
நனவிது உலவிடும் அலங்கோலம்!
அலங்கோலமாய் காதலைச் சிதைத்து
கலங்கிட வைக்கும் சாதிமதம்
வலமிடமாய் நெஞ்சில் பாய்ந்து
நலங்கெடுத்து குருதி வடியவைக்கும்!
வடிந்திடும் குருதியெனப்
படிந்த வஞ்சக நோயினால்
அடித்துப் பிழைக்கும் ஈனர்களால்
மடியுதே நற்கனவும் கானலாய்!
கானலாய் கருகிடும் நித்தம்
தானமாக அடகு வைக்கும்
மானமிழந்த கோலத்தில் நனவும்
கோணலெனும் குருதியில் ஊறுதே
ஊறுகின்ற குருதியும் பாவத்தின்
கூறுகளாய் இயற்கை அழிப்பில்
சீறுகின்ற கோலத்தில் கனவிலும்
ஆறுதலின்றி நடப்புலகு கழியுதே!
- நாகினி, துபாய்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.