கண்ணாடி தேவை!
உருவங்களின் புறத்தைத் திருத்திக் கொள்ள
உவமையற்ற கண்ணாடி தேவை
மாறும் மேகக் காட்சியைக் கிரகித்து
தன்மேல் ஏற்றும் நீள்கடலும் ஆறுகளும்
வளைந்து நெடிந்தோடும் நீரூற்றுகளும்
காட்சியில் அவைகள்
தன்னளவில் கொள்கை அற்றவைகள்!
கவிதை உணர்ச்சிகளின் பசிகளுக்கு
உவமைகளும் உருவகங்களும்
மீன் தூண்டிலில் சிக்கித் தவிக்கும்
இரைப் புழுக்கள்!
உருவகம் புனையும் காட்சிப் பதிவுகள்
உள்ளக் கிளர்ச்சியைத் தூண்டி
உணர்ச்சிகளுக்குக் காட்சிகளின் படிமங்கள்
கவியின் எழுத்துகளுக்கு இரைகள்!
கண்களின் கண்ணாடி நிழல்கள்
உயிரின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன
உணர்ச்சிகளின் வலிகளும் புனைவுக் காட்சிகளில்
உயிராய்ப் பிரதிபலிப்பது உயிர்ச் சித்திரம்.
உருவங்களின் புறத்தைத் திருத்திக் கொள்ள
உவமையற்ற கண்ணாடி தேவை!
இல்பொருள் காட்சிப் பதிவுகளின் வீச்சு
இயற்கைப் பேருணர்ச்சிகளின் ஊடல்!
கண்ணாடி நிழலின் கதிர்கள்
உயிர்க் காட்சியைச் சிதைப்பது கிடையாது
உணர்சிகளின் பிரவாகம் மடைதிறந்து
உயிர்ச் சித்திரங்களாய்
வெள்ள நதியாய்!
உருவங்களின் புறத்தைத் திருத்திக் கொள்ள
உவமையற்ற கண்ணாடி தேவை!
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.