அன்பின் இலக்கணம்
தன்னுடைய குட்டிகளை வாயில் கவ்வி
தகுந்திடத்தில் பாதுகாக்கும் நாயின் அன்பு
தன்னுடைய குஞ்சுகளை சிறகுக் குள்ளே
தலைமூடிப் பாதுகாக்கும் கோழி அன்பு
தன்னுடைய கன்றுதனை நாவால் நக்கி
தன்மடியின் பாலூட்டும் பசுவின் அன்பு
தன்னுடைய குஞ்சுகளின் வாயிக் குள்ளே
தன்னலகால் இரையூட்டும் பறவை அன்பு !
பத்துமாதம் கருவறைக்குள் சுமந்து கொண்டு
பகலிரவு கவனமுடன் பாது காத்து
முத்தாகப் பெருவலியில் குழந்தை பெற்று
முத்தமிட்டு நோய்நொடிகள் அண்டா வண்ணம்
பத்தியத்தில் உணவுண்டு பாலை ஊட்டிப்
பட்டுடலை புழுபூச்சி கடித்தி டாமல்
நித்திரையே போகாமல் விழித்தி ருந்து
நிதம்வளர்த்தே ஆளாக்கும் தாயின் அன்பு !
எந்தயினம் ஆனாலும் தாயின் அன்பில்
எந்தவித வேறுபாடும் இருப்ப தில்லை
நொந்துபசி பட்டினியில் துடித்த போதும்
நோன்பிருந்தே ஊட்டுவதில் மாற்ற மில்லை
சொந்தங்கள் நண்பர்கள் மற்ற வர்கள்
சொரியுமன்பில் எதிர்பார்ப்பு சேர்ந்தி ருக்கும்
எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லா தாயின்
எழிலன்பே இலக்கணமாம் அன்பிற் கெங்கும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.