முடவாத்து - க(வி)தை!

ஆகாயத் தாமரைக் கொடிகள்
வெள்ள நீரினளவில் தன்னை
ஓரடி உயர்த்திக் கொள்கிறது - அது
வானத்தை விஞ்சிவிட எண்ணுகிறதோ?
வெள்ள நீரில் கரைகள் பல கடந்து
புதுவெள்ளம் நிரம்பிய குட்டையை வந்தடைந்த
வெள்ளி நிற மினுமினுக்கும் மீனினங்கள்
குட்டையில் படர்ந்த கொடிகளின் அடியில்
பாசியுணவைத் தேடுகின்றன!
நானோ தாய்மை பெற்றவள்
இருந்தும் என்ன செய்வது?
பசியெனும் நோய் இவ்வுலக உயிர்கள்
யாவற்றுக்கும் பொதுமை!
பசியற்றிருக்கும் வரமொன்றை இறைவனிடம் கேட்கலாம்
படைத்தவனும் பசியால்தானோ நம்மை படைத்தான்?
வேடன் கேட்ட வரமோ?
நான் அவனுக்கு இறையாக இருக்க!
புராணச் சிறுகதை படைப்பவனின்
புராணக் கதையோ?- என் வயிற்றில்
தங்கமுட்டை!
வேடன் ஒருவன் வந்தான்
இறைவன் கொடுத்த வரமோ? -அவனுக்கு
வேட்டையாடிப் பழக!
வாடிவதங்கி வந்தான் தடாகந்தனை நோக்கி
வறுமையின் எளிமையான உருவம் கொண்டிருந்தான்
தாய்மையெனை வணங்கி நின்றான்
வறுமையென கையேந்தி நின்றான்
நீரின் வள்ளல் தன்மை எனக்குண்டென
தங்கமுட்டைக் கதை சொல்லிப் புகழ்ந்தான்
புகழ்ச்சியின் வஞ்சனையின் சூழ்ச்சி - என்
குஞ்சுகளுக்கு அடைக்கலம் தருகிறேன் என்றான்
வறுமைக்கு வறுமையுடையோன்
சிறு ஆறுதல்! இருக்கலாம் வஞ்சமும் கலந்தோ?
தங்க முட்டைதனை ஈன்ற பின்னர்
தலைதனை பிடித்தான்! - தன்
கையம்பால் எனை முடமாக்கி வைத்தான்
படைப்பவனின் தேவமந்திரம் பலமற்றுப் போனது
அடைத்தான் சிறு கூட்டிலே
தங்க முட்டைக்கென பலநாள் எனைத்
தங்கமீன் போல் காத்தான்!
பொறுத்தான் பொறுத்திருந்தான் - அவன்
வறுமை வலிமை பெற்றது
இழந்தான் தன் பொறுமைதனை இழந்தான்
தீட்டியக் கூரால் தங்கம் ஈன்ற
என்னுடலை கிழித்தான்
புது வெள்ளத்து ஆசைபோல்
வலையில் வீழ்ந்த நான்
உயிரற்றுப் போனேன்
நான் என்னுடலை இழந்தேன்
என் குஞ்சுகளையும் இழந்தேன்
அவன் கிடைத்த முட்டைகளையும் இழந்தான்
என்னையும் இழந்தான்
அதன் பின்பு அவனும்
முழு வறுமையில் முடமாகிப் போனான்
முடிவில் இறந்தும் போனான்
முடவாத்தே மனம்!
ஆசையின் தூண்டில்களே வேடன்!
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.