கதையல்ல நிஜம்
ஒற்றைத் தளிராய் வந்தவள்
புன்னகை மொட்டிலிருந்து
சிரிப்பு மலர்ந்து
மழலை வாசம் நிறைப்பவள்...
நெஞ்சில் படுத்துக் கதை கேட்பாள்
அசந்து விட்டாளென சரித்தால்
கழுத்துப் பற்றியிருக்கும் பிஞ்சிக்கரம்
பிரிக்கவே மனமிருக்காது...
காலையில் எழுகையில்
இமைதிறவா முனங்கலுடன்
கைகள் தூக்குபவளை தூக்கிவந்து
வெளித்திண்டிலமர்ந்து
கதை சொல்ல வேணும்...
'கோழி தன் குஞ்சுகளுக்கு
கெக்...கெக்...கெக்...கென எர
கிளரும் போது
கள்ளப்பெறாந்து வட்டமிட,
க்கீர்ர்...ரென சத்தம்கொடுக்க,
குஞ்சிக அனைத்தும் ஓடியணைய
கோழி இறக்கை பொத்திக் கொள்ளும்...
சொன்னதும் இரு கைகளுக்குள்
மகளை இறுக்கிக் கொள்கையில்
கண்கள் திறந்து உதடுகள் மூடி
முத்தமொண்ணு வைப்பாளே
அந்த ஞாபக நிஜங்கள் இப்போதும்...
இருசக்கர வாகனத்தில் எனைக் கட்டுகையில்
தொலைக்காட்சி பார்க்கையில்
என் தொடையில் அவள்
தலை சாய்த்திருக்கையில் வந்து
கதை சொல்லிப் போகிறதே...
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.