வீடு திரும்புதல்...
இனிமை ததும்பிய விழிகளில்
திடீரென வேறொன்று பாய
வீடுவரும் கணவன் பின்னே
எழுந்தோடுகிறாள்
“சண்ட சச்சரவே இருந்தாலும்
ஆம்பள வந்துட்டா வீட்டுக்குள்ள
போனாதான் பொம்பள
அவ கெடக்கா- அந்த
நெனவு கெட்ட மூதி
மொகத்துல முழிக்கலாகாது”
இன்னொரு பெண்ணைப் பேசுகிறது
பெண்கள் கூட்டம்.
களை வெட்டப் போனாலும்
கலெக்குட்டரு ஆனாலும்
கடவுளாவே இருந்தாலும்,
பொம்பள வீடுவந்ததும்
எந்த ஆணும் அடித்துப்பிடித்து
வீட்டுக்கு வருவதை
யாரும் கண்டதேயில்லை...
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.