அதுவொரு காலம்...

அதிகாலைப்பொழுதைத் தினம்
அலுப்பில்லாமல்
எழுப்பிவிடும் சேவல் சத்தம்...
சோம்பல் முறித்தபடியே
கீழ்திசை பரவும் கதிரொளிக்குமுன்
நாங்களும் தயாரென
உழைக்கக் கிளம்பும் கிராமவாசிகள்...
நாட்காட்டித் தாள் பார்க்காத, கிழிக்காத
ஞாபக நாட்களின் கடத்தலில்
அனைவருக்குள்ளும் யதார்த்தம்...
சமூக அடையாளங்கள்
தெருக்களை வகைப்படுத்தியிருந்தாலும்
‘மனிதம்'
மாமன், மச்சான், சகோதரமாய்
பயணப்பட்டுக் கொண்டிருந்தன...
வேற்று மனப்பான்மைகளை
சகிப்புப் பரண் மேல் போட்டு
இனக்கத்துடன் கழிந்தன பொழுதுகள்...
அதுவொரு காலம் ...
கிராமம் சார்ந்த மனிதன்
இயற்கையோடு கலந்திருந்தான்...
மழைவரும் நாள் தெரியும்
ஈசான்ய மூலைக்காட்டுக்கு
ஊர் கூடிய நாளேரு ஓட்டினான்...
விதைமுளைப்பு அறிந்து தனது
நிலமுழுதுக் காத்திருந்து
விவசாயம் வளர்த்தான்...
வாக்கு சுத்தம்
நேர்மைப் பிடிமானம்
சமுதாய முன்னேற்றச் செய்தலில்
பொதுமை உணர்வு நிலைத்திருந்தது...
காசு, பணமெல்லாம்
தானியச் செழிப்புக்குப் பின்னால்...
தின்பண்டம் கிடைக்கும்
பருத்தி, கம்பு பதில் கொடுத்தல்...
மாரியம்மன், காளியம்மன்
குல சாமி கும்பிடு நேர்த்திக்கடனில்
உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளும்...
மனிதனுக்குள் மீறி எழுந்த
கோப தாபப் பிரிவுகளைச்
சாவு சொந்தம் கண்ணீரில் அமுக்கிவிடும்...
அதுவொருகாலம்...
ஏரோட்டிய வம்சவாரிசுகள்
காரோடும் நகர நாகரீகம் பார்த்தனர்
சீரான வாழ்வு சிதையப் போவதறியாது...
இடம் பெயர்தலில்
தனதான தன்மையிழந்து
அவரவருக்கான இடைவெளி குறித்து
விரிவாக்க வெளியில் குன்றினான்...
உறவென்னும் தேவைக்குணங்களில்
ஒதுக்கலைப் பெரிதாக்கி
சுயம்கொள்ளும் நச்சுகலந்தான்...
அடுத்தவீடு என்றபோதும்
அன்னியச் சுவரை முகப் புன்னகை தவிர்த்த
முறைப்பில் காட்டினான்...
எல்லைகளற்ற விட்டுக்கொடுத்தலில்
சொல்களற்ற பேசாமை...
உதவிடலுக்கும் பதவிகளுக்கும்
வெகுமானம்பெற்றுத் தன்மானமிழந்தான்...
என்னதான் மாறியென்ன
பசியென்னும்போதெல்லாம்
உணவுதரும் வர்க்கத்திலிருந்து வந்ததை மறந்து
உயிர்கொள்ளும் திரவம் திண்பதையே
சம்பாத்தியக் கவுரவம் என்கிறானே...
மாயத்திரை கண்கொள்ளாக்காட்சியில்
மனசுகளை விதைத்தான்...
அசுரவேக விளைச்சலாய்
போகங்களைக் குவித்தான் அதிலும்
போதுமென்பதை இழந்தான் இன்றோ
வேகமெடுத்த கிறுகிறுத்த வாழ்க்கையில்...
புதிய கிடைத்தல்களில்
பழமையின் புரிதல் தொலைத்தான்...
இயற்கைக்கு வருத்தமொன்றுமில்லை
இழந்தவைகளை மீட்டெடுப்பதற்கோ
எவருக்கும் அக்கரையில்லை...
உலகமயமாக்கலில் மனித ஓட்டம்
எது சாதிக்கப்போகிறது...
நினைக்க மறுத்தாலும்
நடுக்கம் கொடுக்கும் இதுவொருகாலம்...
எப்போது நினைத்தாலும் குளிர்விக்கும்
அதுவொருகாலம்..!
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.