கூர்மை!
அலைகள் மீண்டு வருகின்றன!
காவிரி அலைகள் கரையை நித்தம்
காதல் அலைகொண்டு தீண்டுகிறது!
செந்நாரை தனியனாய்க் கெண்டையை நோக்கி
அலைகளின் மீது தவம்!
பொறுமையின் போதனை தவம்
தவம் வலிமையுறுகிறது - அலைகள்
கரையை தழுவும் காட்சி
பறந்து செல்லும் வானலை - கவிமுகில்
படகில் நீந்திச் செல்லும் ஒளிக்கதிர்கள்
கொண்டல் கருக்கும்
முகில்களின் கூத்து வீழும் துளிகள்
கரையை தழுவிச் செல்லும் அலைகளின் மீதில்
கவிமுகில் உமிழ்ந்த தூறல்கள்
குமிழ் நிறம் பூண்ட அலைக்கரங்கள்
தவயோகி நாரையின் சிதையா பொறுமை
கெண்டைகள் அலைப்புற்றுச் செல்லும் பாதை
கருமணிப் பார்வையின் கூர்மை
கவனத்தின் சிந்தனையின் வலிமை திட்டம்
வீழ்கின்ற வானுமிழ் நீர்க்குமிழ்கள் தொடர்ந்தன
அலைகள் கரையை தழுவியபடி
செந்நாரையின் ஒற்றைச் சிந்தனை -அதன்
தவஉரு நிழல்
அலைச் சிறகினைத் தோணியாக்கி
சிந்தையை நிலை நிறுத்தும் நங்கூரமாக்கி
ஒற்றைக் காலில் மனோ வலியுடன்
நாரையின் பொறுமை
தவத்தின் வலிமை கூர்மைச் சிந்தனை
கவிகைக் கூத்தின் இம்மியளவு ஓசை
நொடியில் திட்டம் நடந்தேறியது!
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.