விறலி விடு தூது!
அஞ்சி டாமல் வந்து
வஞ்சி என்னைக் காண
நெஞ்சில் விருப்பம் இன்றி
துஞ்சித் திரியும் தலைவன்!
காதில் எந்தன் ஆவல்
ஓதி வாராய் விறலி
நாதி யற்ற உயிராய்
பாதி உடலும் மெலிந்தேன்!
நிலையைத் தலைவன் அறிய
கலையில் சிறந்த விறலி
அலையும் காற்றாய் ஓடி
மலைப்பின் துயரை மாற்று!
என்றோ வந்து சென்று
இன்று வரையும் வராமல்
நன்றாய் தலைவன் என்னை
குன்றிக் குறுகச் செய்தான்!
வற்றல் போல மெலிந்தாய்
என்று பக்கம் உள்ள
சுற்றம் கேலி உரைக்க
முற்றும் உயிர்போ கலுமேன்!
பார்க்க ஏங்கித் தவித்து
நார்போல் இளைக்கும் எந்தன்
ஆர்வம் நிறைவே றவொரு
மார்க்கம் உண்டா சொல்வாய்!
மறியல் இன்றி உடனே
குறித்த நேரம் தலைவன்
அறிந்து காதல் மலரைப்
பறிக்க வரச்சொல் விறலி!
விரைவில் தலைவன் வந்தால்
உரையா டுமன்பு மருந்தால்
கரையும் காதல் நோய்தான்
உரைத்து அழைத்து வாராய்!
- நாகினி, துபாய்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.