இதம் தரும் இளநீர்
புட்டிகளில் அடைத்துவிற்கும் குளிர்பா னங்கள்
புதைத்துள்ளே வைத்திருக்கும் பலவாய் நோய்கள்
எட்டிநின்று பார்த்தாலோ அழகுக் கோலம்
ஏந்தியதைக் குடித்தாலோ எமனின் பாலம் !
பட்டிதொட்டி எல்லாமே பரவி யின்று
பார்த்தினியம் கருவேலம் போல நின்று
திட்டமிட்ட உலகமய சூழ்ச்சி யாலே
தினம்உடலை அழிக்கிறது வயலைப் போல !
முன்னோர்கள் நமக்காக வளர வைத்து
முடிமீது அமுதத்தின் கலசம் வைத்து
தென்னையெனும் மரந்தன்னைக் கண்கள் முன்பு
தேர்ந்தெடுத்துப் பருகுதற்கு விட்டுச் சென்றார் !
அன்னைதரும் முலைப்பாலின் தூய்மை யோடும்
அருஞ்சத்து நிறைந்திருக்கும் தன்மை யோடும்
பன்நோய்க்கு மருந்தாயும் இலங்கு கின்ற
பசுங்காயின் இளநீர்க்கே மாற்று முண்டோ !
பதநீராய் விற்கின்றார் ! சாலை யோரம்
பந்தலிட்டுக் குலைகுலையாய் அடுக்கி வைத்துப்
பதமாகத் தலைசீவி ஓட்டை யிட்டுப்
பகல்பொழுதின் சூடுதனைத் தணிப்ப தற்கே
இதமாகத் தருகின்றார் ! இயற்கை யன்னை
இளநீரை வளநீராய் அளிக்கும் போது
நிதமதனைப் பருகிடாமல் மேலை நாட்டின்
நின்றழிக்கும் நச்சுநீரைப் பருக லாமா !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.