மனம் மாற்றிய மகன்
விடுதியிலே சேர்த்திடுங்கள் அப்பா என்று
விருப்பமுடன் மகனுரைத்த சொல்லைக் கேட்டுத்
திடுக்திட்ட தந்தையோதன் மகனைப் பார்த்துத்
திடமாக நாங்களிங்கே இருக்கும் போது
விடுதிக்கு நீயெதற்குச் செல்ல வேண்டும்
வீட்டினிலே என்னகுறை வைத்தோ மென்றே
தொடுத்திட்டார் வினாக்களினை! படிப்ப தற்கு
தொலையேதும் உள்ளதுவா சொல்வாய் என்றார் !
எனக்கெந்த குறையுமில்லை இந்த வீட்டில்
என்மீது பாசந்தான் பொழிகின் றீர்கள்
எனக்குசிறு உடல்குறைவு ஏற்பட் டாலும்
எடுத்தேகி மருந்தகத்தில் காட்டு கின்றீர்
தினமென்னைப் பள்ளியிலே விட்டு மாலை
திரும்பிடவும் வசதிகளைச் செய்துள் ளீர்கள்
எனக்காக எல்லாமும் செய்யும் நீங்கள்
ஏன்மறந்தீர் பழம்நிகழ்வை என்றே கேட்டான் !
எதைமறந்தோம் சொல்லென்று தந்தை கேட்க
எனைநீங்கள் வளர்த்தபோல்தான் தாத்தா உன்னை
விதைநட்டு வளர்த்தல்போல் வளர்த்தார் அன்று
விழுதாக நீதாங்கிக் காத்தி டாமல்
சதையோடு நகம்பிய்த்தே எறிதல் போல
சாய்த்திட்டாய் முதியோரின் இல்லம் சேர்த்தே
அதைவிட்டு நீயவரை அழைத்து வந்தால்
அகமிருப்பேன் நான்என்றான் ! இசைந்தார் தந்தை !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.