எச்சத்தைத் தின்றவன்

பறவையின் எச்சத்தில்
விழுந்த விதை
எழுந்தது!
செடியானது!
மரமானது!
கிளைகள் பல பரப்பி
பறவைகளின் புகலிடமானது!
ஒற்றை விதையின்
விருட்சம் எழுந்து
பறவைகள் ஆயிரம்
புசித்துப் பசி தீர்க்கப்
பழங்கள் தந்தது!
அடைக்கலம் புகுந்த
பறவைகளின் எச்சத்தில்
விதைகள் விழுந்தன!
ஒற்றை மரம் தோப்பானது!
வனமானது!
இதமான மரங்களுக்கடியில்
இரண்டு கால் மிருகங்கள்
இளைப்பாறின!
இசை மீட்டும் பறவைச் சத்தம்
கேட்டு மகிழ்ந்தன!
அவ்விரண்டு கால் மிருகங்கள்
மரங்களின் வனப்பை பார்த்து
வாய் பிளந்தன!
விழிகளை அகல விரித்தன!
கைகளால் தழுவின!
தழுவிய கைகள்
ஆயுதம் எடுத்தன!
அடியோடு வெட்டி சாய்த்தன!
வனப்பாய் நின்ற மரங்கள்
எழுந்த மண்ணிலே
முழுதாய் விழுந்தன!
கரங்கள் வேறு
கால்கள் வேறு
கழுத்து வேறு
இடுப்பு வேறு
மார்பு வேறென
பல துண்டுகளாகின!
ஆயுதம் எடுத்த
மிருகத்தின் கையில்
காகிதப்பணக் கட்டுகளாகின!
இரண்டு கால் மிருகங்கள்
பகட்டாய் உண்டன!
அந்த மிருகங்களுக்கு தெரியும்
தான் உண்பன யாவும்
பணத்தால் கிடைத்தனவென்று!
அந்த மிருகங்கள் உணரும்
தன் கையிலிருக்கும் பணம்
மரங்களால் கிடைத்தனவென்று!
இரண்டு கால் மிருகங்கள்
தான் உண்ட மிச்சத்தை
ஓரமாய் வீசி எறிந்தன!
அங்கே ஓர் பறவை
தன் இணையிடம் சொன்னது...
'என் எச்சத்தைத் தின்றவன்
நமக்கு எச்சிலைப்
போட்டுச் செல்கிறான் பார்' என்று...!
- கதிர்மாயா கண்ணன், பொட்டல், அம்பை வட்டம்..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.