தேமதுரத் தமிழோசை

தேமதுரத் தமிழோசை திசையெங்கும் ஒலிப்பதற்கு
மாமதுரைத் தமிழ்ச்சங்கம் மலையளவு பணியாற்றும்
ஆமதுவே அருந்தமிழுக் காற்றுகின்ற நற்செயலாம்
தாமதமாய் உணர்ந்தாலும் தமிழர்காள் உணர்வீரே...
தேவாரத் திருத்தமிழை பிரபந்தப் பெருந்தமிழை
மூவாத முத்தமிழை மொழிகளுக்குள் மூத்தமொழி
நாவாரப் பேசுகின்ற நற்றமிழைப் பேசாமல்
காவாமல் கதைபேசி கண்பார்த்து நிற்கின்றோம்
அகத்தியமும் காப்பியமும் அருந்தமிழுக் கிலக்கணங்கள்
வகுத்ததுபோல் இன்றளவும் வாய்த்தமொழி வேறுண்டோ
தகுந்ததொரு மொழியான தமிழ்மொழியை இற்றைநாளில்
அகிலத்தில் அழியுமொழி ஆக்கியதும் நாம்தானே...
பள்ளியிலே தமிழ்மொழியை பயில்வதுவும் கேவலமாய்
உள்ளமதில் நினைக்கின்ற உத்தமரும் நாம்தானே
வெள்ளையரின் ஆங்கிலத்தை விதவிதமாய் உச்சரித்து
நல்லதமிழ் கலந்ததனைத் தமிங்கிலமாய்ப் பேசுகின்றோம்.
அகரத்தில் தொடங்கிஉயிர் அமுதமென மெய்கலந்து
சிகரத்தில் உயிர்மெய்யாய்ச் செய்தசொல்லே அம்மாவாம்
நகரத்தில் அதைவிடுத்து நம்குழந்தை மம்மியெனப்
பகர்கின்ற ஓசையிலே பகட்டினைநாம் காண்போமே.
அப்பாவென் றழைக்கின்ற அருந்தமிழில் மயங்காமல்
டப்பாவாய் டாடியெனில் டான்ஸாடி மகிழ்வோமே
செப்பலோசை அகவலோசை சீர்வஞ்சித் தூங்கலோசை
செப்பிடுமே பாவகையின் செய்யதமிழ் ஓசைகளாய்.
அத்தனையும் அழகோசை அமுதமென்னுந் தமிழோசை
முத்தமிழின் முழக்கமிடும் முரசோசை மொழியோசை
வித்தனைய தமிழோசை வீடுகளில் வீதிகளில்
எத்திசையும் எதிரொலிக்க வேண்டுவதே எனதோசை.
உலகெல்லாம் பரவிடவே உகந்ததொரு வழிசெய்வோம்
நலம்பலவும் அரசாங்கம் நந்தமிழுக் காற்றிடவே
நிலங்கொள்ளும் விதிசெய்வோம் நிச்சயமாய்க் கடைபிடிப்போம்
அலங்காரமாய்ப்பேசி அதிற்சுகமே காணாமல்
அரியணையில் அரங்குகளில் அருங்கல்வி சாலைகளில்
உரியநீதி மன்றத்தில் உலகமொழிப் பயிலரங்கில்
தெரியவரும் தொலைக்காட்சி வானொலியின் பெட்டிகளில்
பெரியவரும் சிறியவரும் பேசுகின்ற செம்மொழியாய்
வாழ்வெனினும் வளமெனினும் மங்காத தமிழென்போம்
தாழ்வெனினும் தலைதாங்கி தமிழ்மொழியை உயிரென்போம்
ஆழ்கடலால் சூழுலகை ஆளுகின்ற மொழியாக்கி
வாழ்த்திடுவோம் சீரிளமை மாறாத தமிழென்றே.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.