காற்றில் வரைந்த ஒலிக்குறிப்பு
ஏதோ ஒன்று தொடந்து கொண்டேயிருந்தது
உடலைக் கீறி எறிவது போல்
ஒற்றைக் குரல்.
அது ஓலமில்லை ஒரு வேளை அவ்வாறு
பயமுறுத்தச் செய்திருக்கலாம்
நீண்டு பயணத்திருக்க வேண்டும்
அந்தக் குரல்
வடக்குக் காற்று வீசிக் கொண்டேயிருந்தது
வலியை உடலில் தேய்த்து விட்டபடியான
செயல் உடல் முழுவதும் பரப்பப்பட்டிருந்தது.
மங்கிய சாரல் போன்ற
ஒன்றை அது கவ்விக் கொண்டபடி
இப்போது அது என்னை தாண்டியிருக்க வேண்டும்
ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்த -அந்த
நிலவின் ஒளியும் சற்றே சரிந்து கொண்டிருந்தது.
சாளரத்தின் வழியே கீற்றொளி
மறைந்து நின்றபடி வானில் சிரித்துக் கொண்டிருந்தது
என் விரல்கள் ஒன்றையொன்று கோர்த்தபடி
இப்படியும் அப்படியும் சில உருவங்களை
இரைத்துக் கொண்டிருந்தது - அவைகள் சில
நாய் பூனை மான் உருவங்களாக...
இப்போது ஒரு குரல் ஒலிக்கத் தொடங்கியது
உருவங்களின் குரலாக மாறிக்கொண்டே…
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.