வாழ்த்துச் சொல்லி...!
பத்துத் திங்கள் பதியம் வைத்து
பார்த்து வளர்த்த பனி மலரே
மறத் தமிழ் தாலாட்டுப் பாடி
மரப்பாச்சி வைத்துத் துயில வைத்தார்கள்
நடைவண்டி பூட்டி நத்தையாய் நடைபயின்றாய்...
தத்தித் தவழ்ந்தவள் தாவி
ஓடுகிறாள் என உதிரங்கள் பூரித்தனர்
உதிரியாய் உதிர்ந்தன மழலை மொழிகள்...
உன் பிஞ்சுக்கரம் கோர்த்துக்
கொஞ்சி மகிழ்ந்தன உறவுகள்...
தாய்மாமன் சீர் வர
தாயவள் உள்ளம் மகிழ
குறும்பு புரிந்தவள் குழல் பிரித்து
காதணி பூட்டி விருந்திட்டு மகிழ்ந்தார்கள்...
நாட்களும் நகர மழலையாய்
இருந்த நீ மங்கை ஆனாய்...
மன்னவன் ஒருவண் உன்னவனாய்
வரும் நாள் எதுவென்று
நாணத்தில் மடந்தை ஆனாய்...
முழுமதியும் அழகுதான்!
மூன்றாம் பிறையும் அழகுதான்!
உன் நகைப்பும் அழகுதான்!
நாவின் சொல்லும் அழகுதான்!
பூவுலகில் மட்டும் அல்ல,
மூவுலகிலும் இல்லை
உன் போல் பேரழகு...!
மடந்தைப் பெண்ணே...!!
மணநாளும் வர உன்
மணாளன் கரம் சேர
தங்கத்தில் தாலி முடித்து
முந்தியில் மொத்தமாய் முடித்து
உன் போல் புதுமலர் ஒன்றை
பத்திரமாய்ப் பதியம் வையடியென,
வாழ்த்துச் சொல்லி வழி அனுப்புகிறாள்
உன் தாயெனும் தமிழச்சி...!
- கிருத்திகா கணேசன்..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.