உண்ணல் பெயர்கள்
செவிக்குணவாய் நற்கருத்துச் சொற்க ளிட்டால்
செம்மையான அறிவுதனில் உயர்வான் மாந்தன்
குவியுதட்டு வாய்க்குள்ளே அளவாய் நல்ல
உணவிட்டால் உடல்நலமாய் இருக்கும் நன்றாய் !
புவிதன்னில் பசித்திருப்போர் பலரி ருக்கப்
புசித்திடுவர் சிலரிங்கே வயிறு முட்ட !
தவித்திருப்போர் பக்கத்தில் இருந்த போதும்
தன்னலத்தார் அதைக்காணார் கல்லாம் நெஞ்சர் !
அடுத்தவர்க்குக் கொடுக்கின்ற மனித நேயம்
அழிந்தாலோ வன்முறைதான் பெருகு மிங்கே
கொடுத்துண்ணும் அன்புமனம் இருந்தால் நாட்டில்
கொடுமைகளும் திருட்டுகளும் ஒழிந்து போகும்
கடுகடுத்த முகத்தோடே அளிக்கும் போது
கரம்நீட்டி வாங்குவோரின் முகமோ வாடும்
கொடுப்பதுவும் நகைமுகத்தில் மகிழ்ச்சி பொங்கக்
கொடுத்தால்தான் வாங்குவோரின் மனமும் வாழ்த்தும் !
உண்ணும்முன் பிறர்க்கீந்தே உண்ண வேண்டும்
உணவுதனில் சோறுதனை உண்ணல் வேண்டும்
தின்னுவது கறிக்காயைக் கனிகள் தம்மை
திணைக்குறிஞ்சி மலையெடுத்த தேனை நாமும்
தின்பதில்லைநாக்காலே நக்கல் வேண்டும்
தின்றபின்பு நன்றாகச் செரிப்ப தற்குத்
தண்ணீரைக் காய்ச்சியப்பின் பருகி னாலோ
தவிர்த்திடலாம் நோய்தன்னை நலமும் ஓங்கும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.