பறந்ததுவோ பாட்டுப் பறவை
மரபென்னும் குளம்பூத்த புதுமைப் பூவே
மண்முட்டை சுரதாவின் உவமைத் தேனே
கரங்களுக்குள் சொல்லீர்க்கும் காந்தம் வைத்துக்
கருத்துகளில் நெஞ்சீர்த்த கவிதைக் கோவே !
சுரங்களையே அசையாக்கும் வரத்தைப் பெற்றுச்
சுடர்முகத்தின் மூக்கைப்போல் முன்நின் றோனே !
அரங்கத்தில் அற்புதங்கள் நாக்கி னாலே
அரங்கேற்றம் செய்திட்ட மந்திரக் கோலே !
தோல்வீதிக் காமத்தைத் தூண்டி விட்டே
தொகைவீதி பெறுகின்ற கவிஞ ருக்குள்
பால்வீதி அவலத்தைச் சுட்டு விரலால்
பதைபதைக்கக் காட்டிட்டாய் ! குமுறு கின்ற
நால்வீதிக் கோபத்தை ஆலா பனையில்
நேயர்வி ருப்பத்தின் நெருப்பாய் கனன்றாய்
நூல்வீதி படைப்பதிலும் எழுது கோலால்
நூற்பதிலும் புதுயாப்பாய் திகழ்ந்த பாவோய் !
தொன்மத்தைப் புதுக்கோல வடிவம் செய்தாய்
தொடர்ந்துவரும் முரண்களினைப் படிமம் செய்தாய்
எண்ணுகின்ற புதுமுறையால் எதுகை போன்ற
எழுத்தாளர் பின்பற்றும் மோனை யானாய்
வண்ணங்கள் எழுத்திலன்றி மனத்தில் இல்லா
வண்தமிழே ! அப்துல்ரகு மானே ! பாட்டுப்
கண்மணியே ! புகழுடம்பாய் வானம் சென்றோய்
கனித்தமிழாய் என்றென்றும் வாழ்வாய் வாழீ !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.