அக்காவை எப்போதும் மறந்திடாதே...!
அன்னையின் வயிற்றில்
பிறந்த அவள்
அன்னை இல்லாத வீடுகளில்
இளவயதுத் தாய்...
உழைத்து வரும் அப்பாவிற்கும்
உடன் பிறந்தவர்களுக்கும்
உணவிடும் அன்னபூரணி.
அன்று...
கஷ்டப்படும் வீட்டில்
குழந்தைகள் பல பிறந்தால்
தம்பி தங்கைகளைத்
தாயாக வளர்த்துத்
தன் படிப்பைக் கெடுத்தவள்
இன்று...
தம்பி தங்கையைப்
படிக்க வைப்பதற்காய்
மாடாய் உழைத்து
பருவம் கடந்து
முதிர் கன்னியாகியும்
அன்பு மணம் வீசுபவள்...
அம்மா அப்பாவை
அனாதை இல்லத்தில்
சேர்த்துச் செல்வது போல்
தந்தை தாய் மறைவுக்குப் பின்
அக்காவை மறந்துவிடும்
உடன்பிறப்புகளும் அதிகம்...
அன்னையாய் வளர்த்தவளை
அடியோடு மறப்பது
உடன்பிறந்தவர்களுக்கு நல்லதல்ல
தனியாய் இருந்தாலும்
தன் கணவனோடு வாழ்ந்தாலும்
அக்காவை எப்போதும் மறந்திடாதே...!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.