இர[வல்]வு மாலைகள்

அக்ரஹாரம் தெரு என்றாலும்
பூக்கடை சந்துதான் விலாசம்...
மூணுக்கு ரெண்டு அளவு
மூன்று பக்கம் சக்கை மறைத்த மேசை
அதன்மேல்
நீல நிறத்திலான துணி விரிப்பு...
ஆறடி மூங்கில் இரண்டு ஊன்றி
அதன் இணைப்பிலோர் அகத்திக் குச்சி
அதனில் வளைத்து தொங்கவிடப்பட்ட
சைக்கிள் சக்கரத்துக் கம்பிகள்...
வெயில், மழை, காத்து தாங்கும்
நீண்ட நாட்களாய் சனல் இறுக்கத்தில்
படபடத்தவாறே மேல் தார்பாய்
அவ்வளவுதான் வாச விளம்பரத்தில்
கடை அடையாளம்...
நெத்தி நிறைத்த திருநீர் பூச்சு
மத்தியில் குங்குமம்
அதையும் சுத்திச் சந்தனம்...
துரைப்பாண்டியின் கைவிரல்கள்
‘ பூ '
நெய்தலில் மெனக்கிடுவதில்லை
சற்றைக்கெல்லாம்
மல்லிகைச்சரமாய், கதம்பப்பந்தாய்
ரோஜா மாலையாய், பன்னீர், கேந்தி
மாலையாய் உருக்கொண்டுவிடும்...
வியாபார அனுபவத்தில் கறாறாக,
விட்டுக் கொடுத்தலில்
நயந்த பேரத்தில்
விலை கட்டுபடியாகாததில்
திருப்பி அனுப்புதல்
எல்லாமே புன்முறுவலோடுதான்...
‘ பூ '
பையை வைக்கும்போதே
அங்கே அவர் நின்றிருந்ததை
கவனித்து,கணித்து
‘மாலை வேணுமா பெரியவரே?'
கேட்க,
‘ஆமா தம்ப...
கேள்விப்பட்டதும்
ஒரு வேகத்துல பொடிநடையா
கிராமத்துலருந்து வந்துட்டேன்
பாத்துப் பாத்து வளத்த புள்ள
பொசுக்குனு போயிட்டா
வெறும் கையோட போய்
பாக்க மனசு ஒப்பள' வருத்தமுடன்
பத்து ரூபாய் தாள்கள் அஞ்சை நீட்டவும்
ரோஜா மாலை
உள்வாங்கிய கேரிப்பையை
கொடுத்து
நாப்பது ரூபாய் வாங்கியபடியே
‘எப்ப வந்திங்கையா?'
துரைப்பாண்டியின் கேள்விக்கு
‘ரெண்டாஞ்சாமம் இருக்கும்'
சொன்னதும்
அவர் போய்க்கொண்டே இருந்தார்...
இப்போதெல்லாம்
துரைப்பாண்டி கடையில்
'இர[வல்]வு மாலைகள்'
தாங்கியபடி சில கம்பிகள்..!
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.