நெஞ்சம் உருகுதே
உண்ண உணவும் உடுக்க உடையுடன்
எண்ணி இருக்க இடமுமின்றி - மண்ணிலே
மிஞ்சிடும் ஏழையரை மேலாகக் கண்டாலே
நெஞ்சம் உருகும் நினைந்து.
ஏதிலியாய் என்றும் அலைவோரைக் கண்ணுறும்
போதினிலும் எங்கும் புகலுமின்றி - நாதியின்றிப்
பஞ்சையாய்த் தூங்கிடும் பாட்டாளி கண்டாலும்
நெஞ்சம் உருகும் நினைந்து.
காசின்றிக் கல்வியைக் காண வழியின்றிப்
பேசிடும் மாணவர் பேதைமையால் - வாசிக்கக்
கொஞ்சம் வகையிருந்தும் வாடும் நிலைகண்டால்
நெஞ்சம் உருகும் நினைந்து.
பாலுக் கழுகின்ற பச்சைக் குழந்தையுண்டு
நூலுக் கழுகின்ற ஏழையுண்டு - மேலுக்கு
மிஞ்சிடும் கூழுக்கும் அழுகின்ற வேதனையால்
நெஞ்சம் உருகும் நினைந்து.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.