வாழிய எங்கள் தாய்த்தமிழ்

கண்ணுதலான் கழகமொடு கவிப்புலவர் பலரோடு
பண்ணுறவே தெரிந்தாய்ந்த பசுந்தமிழின் தோற்றத்தை
மண்தோன்றாக் காலத்தும் மகத்தான நாகரிகம்
கொண்டதொரு காலமதாய்க் கொண்டமொழி என்தமிழே...
அகமும் புறமுமாய் ஐம்பெருங் காப்பியமாய்
முகமலர திருக்குறளை முன்னிறுத்தும் பொதுமறையாய்
சிகரமெனக் கம்பனையும் சீர்செய்யப் பதினெட்டும்
நிகரிலாச் செல்வமாய் நெஞ்சையள்ளும் இளங்கோவும்
வகுத்ததெலாம் இலக்கியமாய் மாத்தமிழின் பேரன்பில்
தொகுத்ததெலாம் பிரபந்தம் தேவாரத் திருமறையாய்
பகுத்துவைத்த பைந்தமிழின் பகுத்தறிவுப் பெட்டகமாய்
வகைவகையாய் இலக்கியங்கள் வண்ணத்தமிழ்ப் புலவர்கள்
காலத்தால் அழியாத காவியங்கள் படைத்ததமிழ்
நாளும் வளராமல் நலிந்திடுமோ இக்காலம்
கூளமெனப் போய்விட்ட குப்பை மொழிகளுக்குள்
மேளம் முழங்கவரும் மெய்த்தமிழே மூத்தமொழி
மீளும் உயிர்கட்கும் மேன்மை கொடுக்குமொழி
ஆளும் வளரவிட்டு அறிவையும் வளர்க்குமொழி
அன்னைத் தமிழுக்கே அடிபணிந்தேன் அமுதமெனும்
தென்னன் தமிழுக்கே திசையெங்கும் தொழுகின்றேன்
என்னையும் பொருட்டாக்கி ஏற்றமிகு தமிழ்ச்சொல்லை
முன் நாவில் மகிழ்ந்தளித்த மெய்ப்பொருளை வணங்குகிறேன்.
எந்நாளும் மறவேனே என்னுயிராய் ஆனதமிழ்
செந்நாப் புலவரெலாம் செய்தமிழை வணங்குவனே!
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.