இழிநிலை தவிர்க்க...!
அழிவெனும் பாதை அமைக்கின்ற உறவுடனும்
பழியென எதுவும் பாவங்கள் செய்யாமல்
வழியினைக் கண்டு வளர்கின்ற எழுச்சிநடை
இழிநிலை தவிர்க்கும் இடமென்று துணிந்தாடு!
கலக்கமும் வராமல் கவலைகளை விரட்டுகின்ற
பலமென விரல்கள் பத்தினையும் முதலாக்கி
உலவிட எடுக்கும் உயர்வான நோக்கங்கள்
நலம்பல அளிக்கும் நமக்கென்று வழக்காடு!
வடம்பிடித் திழுத்தால் வகையாய்த்தேர் நகர்வதுபோல்
நடத்திடும் செயலில் நம்பிக்கை கொண்டென்றும்
தடத்தினைப் பதித்தால் தாவிவரும் நற்பயனும்
அடர்த்தியாய் இழிவை அழிக்குமென நடமாடு!
விழிப்புடன் கடமை வீணாக்காப் பொழுதொன்றே
வழியென நம்பி வாக்கினிலே நேர்மையுடன்
பழியிலாச் சிந்தைப் படிக்கல்லைக் கைக்கொண்டு
இழிநிலை தவிர்க்க இறுதிவரை போராடு!
((கலிவிருத்தம்)
- நாகினி, துபாய்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.