நிழல்களின் பாதை!!

இந்த உலகம் அவனுக்காகவே
படைக்கப் பட்டிருப்பதாகவே நான் நம்புகிறேன்!
இந்த உலகம் மற்றொன்றிலிருந்து
தோன்றியதாக இருக்கலாம். ஆனால்
அவனைச் சார்ந்த வாழ்வியலில்
இந்த உலகம் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது!
அல்லது அவனால் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது!
இந்த உலகம் காற்றால் நிரப்பப்பட்ட
நிலைத்த தன்மையற்ற பெரிய பந்து.
சுழல் விதியைக் காலக் கணக்கீடாகக் கொண்டுள்ளது!
வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய
சகாராவும் பாலைவனமாகிய காலமும்
இங்கே உண்டு!
அமேசானின் நதிகளும் ஒருநாள் பாலைவனமாகலாம்
பாலைப்பூக்கள் மட்டும் மலரும் வனமும் ஒருநாள்
பனிபொழியும் பிரதேசங்களாகலாம்!
காலத்தின் சக்கரம் இங்கே
உறக்கமின்றி தொடர்ந்து சுழன்று கொண்டேயிருக்கும்!
மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுழல
மேற்கும் கிழக்கும் சமமற்ற
வெப்பத்தை உணர்கின்றன!
மாற்றங்களை எதிர்கொண்டே -அவன்
காலச்சக்கரத்தில் பயணம் செய்தவன்
செய்கிறவன் செய்யப் போகிறவன்!
கரடு முரடான பாதையில் - தன்
கால்தடத்தால் வரலாறுகளைச் செதுக்கிய
காலத்தின் ஒப்பில்லாச் சிற்பி!
நியாண்டர்தால் மனிதனின் காலத்தைத் தன்
நீண்ட வரலாற்றுப் பாதையால் மாற்றியவன்!
மாற்றிக் கொண்டிருப்பவன் மாற்றப் போகிறவன்!
இந்த உலகின் கருவிலிருந்து பிரசவிக்கப்பட்ட
உயிர்கள் பலபல இருப்பினும் எல்லாவற்றிலும்
சிறப்பிக்கப்பட்ட குணங்கள் கொண்ட
இயற்கையின் தீவிர தொடர் விமர்சனத்திற்கும் ஆட்பட்டவன்
ஆட்படுகிறவன் ஆட்படப் போகிறவனும் அவனே!
“உடலால் உடல் மொழியால்
நிறத்தால் நிறத்தின் மொழியால்
திசையால் திசையின் மொழியால்”
அவனுடைய மாற்றத்தின் நிழலில்
இந்த உலகம் இயல்பின் விதியில்
தன்னை மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது!
அவனுக்கென்று ஒரு பொதுமொழி உண்டு
அது அவனுக்கே உரியது! கண்ணீர்!
அடிபடுகிறபோது ஆறுதல் தரும்
கண்ணீரைப் போல்
பெருவெள்ள மழைநீர் தாகம் தீர்ப்பதில்லை!
தாகம் உடலின் நிழல் போல
தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்!
நிழலின் சாய்வுப் பக்கத்தை
பயணித்துச் செல்லப் போகும் அவன்
தேர்தெடுக்கும் பாதையே தீர்மானிக்கிறது!
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.