குடம் சுமப்போம்!
சின்னக் குடத்தை
சின்ன இடையில் சுமக்கும்
சின்னப் பெண்ணே
உன்னைப் பார்த்ததும்
நினைவுக்கு வருதே
குடம் சுமத்தலின் நன்மை.
ஆத்துல குளத்துல
வயக்காட்டு கிணத்துல
தண்ணி அள்ளி வந்ததால
கஷ்டம் தெரிஞ்சது
சிக்கனமா செலவு செஞ்சோம்
தண்ணிய பணத்தப் போல.
நீண்ட தூரம்
நீர் நிறைஞ்ச குடம்
தூக்கிச் சுமந்தோம்
உடற்பயிற்சியாய் அது
புத்துணர்வு தந்தது
நோயின்றி வாழ்ந்தோம் அன்று.
இடுப்பில் குடம் சுமந்து
கிடைத்த அனுபவம்
குழந்தையை இடுப்பில் வைத்து
நடக்க சொல்லித் தந்ததே
அன்னையின் பரிசத்தால்
குழந்தையும் மகிழ்ந்ததே.
தெருக்குழாயும் இன்று
வீட்டுக்குள் வந்தது
குடம் சுமக்கும் வாய்ப்பும்
இல்லாமல் போனது
விளைவென்ன தெரியுமா?
விதவிதமாய் நோய்தான்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.