நெடுஞ்சாலைப் பயணம்!
நெடுஞ்சாலைப் பயணம்
நெஞ்சமெல்லாம் ரணம்...
சுற்றிலும் தேடுகிறேன்
தொலைந்துபோன பசுமையை...
பாரெங்கும் பவனிவர
பாதை அமைத்திட்டோம்...
சாலையின் இருவெளியும்
வயல்களை விழுங்கி
கொடிக் கம்பங்களுடன்...
பூமித்தாயின் மடிமீது
மனைபிரித்து அவளை
மடிந்துபோகச் செய்திட்டோம்...
விதைத்து வைத்தவை
விளைந்து வர
விடத்தை பாய்ச்சினோம்...
தொழிற்சாலை அரக்கனிடம்
தொடர்ந்து பெற்ற கழிவுகளால்
நஞ்சாய்ப்போன நதிநீர் கொண்டு...
கவிதைபேசிய கழனிகள்
கதறியழுதிடும் ஓசை
என் கண்முன்னே தோன்றிட
அன்னம் அளித்த
புவனத்தை புண்ணாக்கி
சாலை நடுவே வழியெங்கும்
அரளிச்செடி நட்டு அழகுபார்க்கும்
எம் மானுட மாற்றத்தால்
வெட்கி நடக்கிறேன் வேதனையாய்...
ஆம்...
நெடுஞ்சாலைப் பயணம்
என் நெஞ்சமெல்லாம் ரணம்..
- கிருத்திகா கணேசன்..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.