கருப்புக் காந்தி காமராசர்
தம்மக்கள் நலமெண்ணுந் தலைவ ருக்குள்
தமிழ்மக்கள் நலங்காத்த காம ராசர்
இம்மக்கள் அம்மக்கள் என்றில் லாமல்
எல்லோர்க்கும் கல்வியெனுங் கொள்கை தந்தார்
நம்மக்கள் பசியடங்க மதிய நேரம்
நலமார்ந்த உணவளித்த நல்ல மாந்தர்
தம்மதென எதனையுமே வைத்துக் கொள்ளாத்
தலைவரவர் தமிழ்நாட்டின் கருப்புக் காந்தி.
பச்சைத்த மிழரென்றே பெரியார் சொன்னார்
படிக்காத மேதையெனப் பாடஞ் சொன்னார்
இச்சகத்துத் தலைவருக்குள் இருப்பில் லாத
எளியமனத் தொண்டரவர் நாட்டின் நன்மை
கச்சிதமாய் அடைவதற்குக் கடமை யாற்றிக்
கைக்கொண்ட பணிகளிலே நிறைவைச் சேர்த்தார்.
உச்சமென நாடாளும் வாய்ப்பைத் தள்ளி
உருவாக்கித் தலைவர்கள் அழகு பார்த்தார்.
அணைகட்டைக் கட்டுவித்து நீர்பெ ருக்கி
ஆதார விவசாயங் காத்து நின்றார்
முனைப்போடு தொழில்வளங்கள் பெருகச் செய்தார்.
முன்னேற்றப் பாதையிலே நாடு செல்ல
வினையாற்றி இளையோரைப் பதவி யேற்றி
விரைவாகச் செயலாற்றுந் தன்மை கொண்டார்
நினைவிருத்தி அவர்பெயரை நெஞ்சில் கொள்வோம்
நிகழ்காலம் அவராண்ட பாதை செல்வோம்.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.