பார தீ...நீ.
தீப்பிடிக்க தீப்பிடிக்க சொற்கள் செய்தாய்
திசையெங்கும் பரவுகின்ற அக்னிக் குஞ்சாய்
பாப்புனைந்த வார்த்தைகளுள் வெடிம ருந்தாய்
பரங்கியரும் பதறியோடப் பாட்டுச் செய்தாய்
பூப்புனைந்த கோலமெனக் காட்டும் பாடல்
புயலெனவே பாய்ந்துவரும் நடையைத் தந்தாய்
யாப்பறிந்த தமிழ்மொழியில் வேட்டு வைத்த
எட்டையபு ரபாரதி நீ தீயின் தோற்றம்.
கட்டற்ற அடக்குமுறை ஏவி விட்டும்
கலங்காது கவிதைகளைச் செய்த வன்நீ
மட்டற்ற தண்டனைகள் தந்த போதும்
மாறாத கவிமழையைப் பெய்த வன் நீ
சட்டத்தின் பிடிகளுக்குள் சிக்கி டாமல்
சந்தர்ப்ப வலைகளையே நெய்த வன்நீ
வட்டத்தில் முடங்கிடாமல் வான்வ ரையில்
வண்டமிழில் பயணித்த மன்ன வன் நீ
கடையருக்கும் கடையருக்கு விடுத லையைக்
கருணையுடன் வேண்டிநின்ற சொற்போ ராளி
உடையட்டும் விலங்குயெனக் கைகள் நீட்டி
உரத்தகுரல் எழுப்பிநின்ற உரிமை யாளி
விடைகாணா வினாக்களுக்கு விடைகள் தேடி
விடுதலையைக் கனாக்களிலே கண்ட வன் நீ
படைவந்த போதினிலும் எதிர்த்து நின்ற
பாரதி நீ சுட்டெரிக்கும் பார தீ...நீ.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.