உழவுக்கும் உழவர்க்கும்

உப்பிட்டு உண்ணுகின்ற சோறு தந்த
உழவுக்கும் உழவனுக்கும் விடிவு எங்கே!
தப்பிவிடும் காலமல்ல வாழ்வில் நாளும்
தானியங்கள் பொய்த்திடவே வயிறும் காயும்
குப்பிகளில் உணவுகளாம் தின்னச் சாகும்
குப்பைகளாய் வயிறுண்டு நோயில் வீழும்
தப்பிக்க வழியின்றி மரணம் கவ்வும்
தரைமீது புல்முளைக்க காண்பார் யாரோ!
வந்துநின்ற இளையோரே போன தெங்கே
வந்துவிட்ட கேளிக்கை நிகழ்வில் மூழ்கி
தொந்திவளர்க் குங்கூட்டத் தோடே நின்று
தொலைதூரம் போனதென்ன சொல்லு நீயே
வந்துவிழா வட்டியிலே இனியும் சோறு
வக்கனையாய் தொலைக்காட்சி காண்ப தென்ன
வந்துகுதி போர்களத்தில் உழவை மீட்க
வந்தனைசெய் உழவுக்கும் வளங்கள் கூட்டி!
இளைஞர்காள் எழுவீரே வீறு கொண்டு
இனியுலகில் உழவுக்கு கேடு இல்லை
களைவீரே தந்திரங்கள் நரிகள் செய்ய
காத்திடுவோம் உணவுண்ண நாளை மக்கள்
தலைமுறைகள் வாழ்ந்திடவே உழவு காப்போம்
தண்ணீரை சேமிக்க வழிகள் காண்போம்
மலையெனவே எழுந்துநின்று மண்ணைக் காப்போம்
மறத்தமிழர் என்றுணர்ந்து மகிமை செய்வோம்!
மேடையிட்டு குளிர்பதன அறையில் நின்று
மேதாவி போல்பேசும் வெள்ளைச் சட்டை
கோடையின் மழைபோலே வந்து போகும்
கொள்கையற்ற பேச்சுகளால் என்ன மிஞ்சும்
மூடைகளாய் பொய்சொல்லி திரியும் கூட்டம்
முக்காலிச் சண்டைக்கு முன்னால் நிற்கும்
பாடைகளை கட்டுகின்றார் உழவ ரிங்கே
பரிதாம நிலைதானோ நாட்டின் எல்லாம்.!
(எண்சீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)
- கவிஞர். கு. நா. கவின்முருகு, துபாய்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.