சுதந்திரநாள் உறுதி ஏற்போம்!
சாக்கடையாய் நாடுதனை மாற்றுதற்கா
சாந்தமூர்த்தி விடுதலையைப் பெற்றளித்தார்
தீக்கனலாய் வன்முறையை எரியவைத்துத்
தீய்ப்பதற்கா வஉசி செக்கிழுத்தார்
தாக்குகின்ற சாதிமதம் வளர்ப்பதற்கா
தன்னுடலில் தொழுநோயைச் சிவாவும்பெற்றார்
ஏக்கத்தில் மக்கள்தாம் வாடுதற்கா
ஏந்திகொடி குமரனுமே உயிரைவிட்டார் !
வளந்தன்னை ஊழலிலே சுருட்டுதற்கா
வாஞ்சிநாதன் ஆட்துரையைச் சுட்டுக்கொன்றார்
அளவின்றி அரசியலார் சொத்தைச் சேர்க்கவா
அல்லலினைத் தீர்த்தகிரி சிறையில் ஏற்றார்
பளபளக்க ஆட்சியாளர் பவனி வரவா
பட்டினியில் பாரதியார் பாடல் யாத்தார்
களவு கொள்ளை அதிகார ஆர்ப்பாட்டங்கள்
காண்பதற்கா வெள்ளையனை ஓடவைத்தார் !
கதர்சட்டை ஒன்றுடனே முதல்வராகக்
கடமையினைச் செய்திட்ட காமராசர்
பதவிதனில் இருந்த போதும் சொந்தவீடு
பார்க்காத தூய்மையான அமைச்சர் கக்கன்
முதலாக வேட்டியொன்றைத் துவைத்துக் கட்டி
முழுத்தொண்டே தன்பணியாய் வாழ்ந்த சீவா
நிதம் மக்கள் வாழ்வுயரப் பாடுபட்டோர்
நினைவுகளாய் ஆனதுவே நாடுமின்று !
அந்தமானில் கல்சோறு உண்டு முன்னோர்
அரும்உயிரில் பெற்றளித்த அருமை நாட்டை
சொந்தநலன் ஒன்றினையே கொள்கையாக
சேர்ந்துசிலர் அழிப்பதனைக் காண்பதோ நாம்
அந்நியனை விரட்டுதற்கே ஒன்று சேர்ந்து
அடக்குமுறை எதிர்த்திட்ட முன்னோர் போன்று
முந்திநின்று கயவரினை வீழ்த்தி நாட்டை
முத்தாக ஒளிரவைக்க உறுதி ஏற்போம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.