விடுதலைத் திருநாள் வந்தது!

விடுதலை என்றொரு திருநாள் வந்தது
விடுமுறைக் கான நாளாய் நொந்தது
கெடுதலை யறியா மாந்தர் கூடி
கீழ்மைப் பட்டதை யொழிக்க ஓடி
அடிமை வாழ்வை அகற்றும் தியாக
ஆன்மிக வேள்வி அறத்தைப் புரிந்து
கடிய போராட்டக் களம்பல கண்டு
கண்முன் கொணர்ந்த சுதந்திர சோதி
இன்றோ தொலைக்காட் சிமுன்ன மர்ந்து
தின்று தொலைக்கும் திருநா ளானது
முன்பு புரிந்த தியாகச் செயல்கள்
முன்கதைச் சுருக்க மாகிப் போனது
பின்கதை யிங்கே பெருங்கொள்ளையர்
தன்னலங் கருதுங் தனிப்பெருங் கைகளில்
பன்னாட் டுவணிகப் பாதையில் ஓடும்
முன்னே ராகி முழுதும் சாய்ந்தது.
உடல்பொருள் ஆவி உயிருடன் சேர்ந்து
திடமன துடனே துணிந்துமுன் னின்று
தடியடி வாங்கி சிறைபல சென்று
கடும்பாறைக் கல்லு டைத்து விழுந்து
அடிமா டெனச்செக் கிழுத்து அடிதடி
படுமா றெனவே பணிகள் புரிந்து
சுடுதலும் குளிரும் சொர்வு வீழ்ச்சியும்
கடுகள வேனும் காணா திருந்து
நடத்திய அறப்போர் நன்மை புரியக்
கிடைத்தது வன்றோ இந்தச் சுதந்திரம்
அடிப்படை உரிமை அனைத்தும் கிடைக்க
அடிமை வாழ்வை அகற்றிய தன்றோ
குடிமுறை யாட்சி கொணர்ந்த தனாலே
விடியல் வெளிச்சம் வெளியில் வந்தது
நடைமுறை வாழ்வும் நாம்சொலும் பேச்சும்
தடையின றிநமதாய்த் தனிச்சொத் தானதே.
இந்த விடுதலை இன்ப விடுதலை
இனிது காத்திட எடுப்போம் உறுதி
சிந்தனை யொன்றாய்ச் செயலது மொன்றாய்ச்
செப்பு மொழிகளின் சிறப்புறு முகமாய்
இந்திய மண்ணை என்றுங் கோப்போம்
இதன்பெரு மகத்துவம் இங்கே உணர்வோம்
சிந்திய குருதிச் செம்மை யுணர்ந்து
தேசிய வழியொன்று சிறந்த தென்போம்.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.