பாரதியால் வந்த பலன்
தீந்தமிழில் பாட்டிசைத்துத் தென்றெலெனத் தாலாட்டி
மாந்தர்க குணர்வூட்டி மாதவமாய்ப்... பாந்தமுடன்
பாரத அன்னை விலங்கொடிக்கப் பார்த்ததுவே
பாரதியால் வந்த பலன்
வெடிகுண்டுப் பாட்டெழுதி வெள்ளையரின் ஆட்டம்
அடியோடு நீக்குதற்கே ஆங்கே... இடிபோலப்
பாரதிரும் சொற்களால் பாரதத்தை மீட்டியதே
பாரதியால் வந்த பலன்.
நவநவமாய்ப் பாட்டிசைத்து நாட்டடிமை நீங்கத்
தவமெனவே வாழ்ந்துவந்து தாங்கும்... யுவயுவதி
வீறுகொண்டு நின்று விடுதலைக்காய்ச் சேர்த்ததுதான்
பாரதியால் வந்த பலன்.
அச்சந் தவிர்த்தும் அடிமைவாழ்வின் மீதான
இச்சை எரித்துதும் இந்தியா... இச்சகத்துச்
சீராய் முழங்கியதும் சிந்தை எழுப்பியதும்
பாரதியால் வந்த பலன்.
சீட்டுக் கவியான சிந்தையினை மாற்றிநின்று
வேட்டுக் கவியாய் விடுதலைக்குப்... பாட்டிசைத்து
பாரதமே வையத் தலைமைகொளப் பார்த்ததுதான்
பாரதியால் வந்த பலன்.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.