ஆசை கொள்!

* ஆசை கொள் !
மண்ணாசை கொள் !
தாய் மண்ணின் மீது
ஆசை கொள்!
* உறவோடு உருவாகும்
சொந்தம் சிலகாலம் மட்டும்!
மண்ணோடு நீ கொள்ளும்
சொந்தம் மண்மூடும் மட்டும்!
* அன்னியரும் ஆசை கொண்டு
கால்பதித்த மண் இது !
கடல் தாண்டி மலை தாண்டி
கைப்பற்ற
ஆசை கொண்ட மண் இது !
மண்ணிற்கு உரிய நீ
மண் மீது நேசம் கொள் !
*தேகம் தந்தது
தாய் என்றால்
சுவாசம் தந்தது தேசம் !
* சிறகு முளைத்தாலும்
பறவை விண்ணைத்
தாண்ட எண்ணுமே தவிர
தன் கூட்டைத் தாண்ட எண்ணாது!
* உன் சிறகுகள்
மட்டும் ஏனோ
வெளிநாட்டு வேடந்தாங்கல் நோக்கி !
* அடிமைத்தளை அகன்ற பின்னும்
அடிமை மோகம்
இன்னும்
மனதை விட்டு நீங்காமல் !
* சுதந்திரதின கொண்டாட்டம்
ஆரஞ்சு மிட்டாயோடு
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோடு
முடிவதல்ல !
* தளைகளை நீக்கி
சுதந்திரம் கொள் !
உன் அடிமை மோகம்
நீக்கி சுதந்திரம் கொள் !
* வளம் இல்லை என்று கூறி
வானைத் தாண்டும்
இளைய சமூகமே!
* அன்னமிடும் விவசாயி
அனாதரவான நிலை கண்டும்
அயல்நாட்டு மோகம் ஏன்?
* பயிர் வளரும் வேளையில்
கொஞ்சம்
களை தோன்றுவது இயல்பு தான் !
களைந்திட முயலாமல்
நிலத்தைக் குற்றம் சொல்லி
ஆவதென்ன?
* தியாகிகளின்
குருதியே நீராக
தேகமே உரமாக
உருவான மண் இது !
* உன் கரம் தீண்ட
ஏக்கம் கொள்ளும்
மண் மீது ஆசை கொள் !
தாய் மண் மீது ஆசை கொள் !
* சுதந்திரக் காற்றை
சுகமாய் நேசம் கொள்ள
மண் மீது ஆசை கொள் !
தாய்மண்ணின் மீது ஆசை கொள் !
- முனைவர் பா. பொன்னி, சிவகாசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.