இடறிய பொழுது!

இந்த நாள் இன்றைய நொடியில்
என் வலது காலை முள்ளில் குத்திக் கொண்டேன்
கட்டைவிரல் “ஆ! ஓ!” என உணர்ச்சியை
சொட்டுச் சொட்டாய் நிலத்தில் உதிர்த்துக் கொண்டது
“வலி” வலியை வலுவாக்கிக் கொண்டிருக்க
என் நாவும் மேலும் “ஆ!ஓ!” என தன்பங்கிற்கு உணர்ச்சியை
முகக்குறிப்புடன் வெளிக் காட்டிக் கொண்டது!
இடக்கால் “இடறிய காலை” நோக்கித் தன்பங்கிற்கு
இழிவு அச்சத்தை நிலத்தில் ஊன்றிய படி
இளித்துக் கொண்டது! சில நொடிகள்!
ஏதோ தனக்கு ஞானக்கண் காட்டிய வழியால்
தப்பித்தோம் பிழைத்தோமென வெற்று எண்ணத்தில்!
இடறி நொண்டிக் கொண்டிருந்த காலை நோக்கி
சிறு கண்ணீருடன் இரக்கப் பார்வையுடன்
என் கண்கள் சற்றே கடிந்து கொண்டிருக்கலாம்
சில நொடிகளுக்கு வலக்கால் நொண்டிக் கொண்டு நடக்க
சில அடிதூரத்தில் “ஆ!ஓ!”வென வீரிய உணர்ச்சிக் குறிப்பு
இப்போது வலக்கால் “இடறிய காலை” நோக்கி
இடக்கால் “வழுக்கியதால்” முறித்துக் கொண்டாய்
இளித்துக் கொண்டது! பல நொடிகள்!
இப்போதும் என் கண்கள்
சிறுகச் சேர்த்தக் கண்ணீர்த் துளிகளை
“பொல பொல”வென! நிலத்தில் சோர உதிர்க்க
கண்கள் வலியைக் கண்ணீரால் துப்பிக் கொண்டது!
கண்கள் கண்ணீரால் தன்னைத் தானே
ஆற்றுபடுத்திக் கொண்டிருக்கும்?
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.