முருகனவன்
வள்ளி மணவாளன் வள்ளல் குணசீலன்
தெள்ளு தமிழின்பத் தெய்வமவன்... துள்ளிவரும்
வேலால் வினைதீர்க்கும் வெற்றியருள் சக்தியுமை
பாலகனைப் பைந்தமிழாற் பாடு.
அழகன் முருகனவன் ஆனைக் கிழவன்
பழகுந் தமிழ்முதல்வன் பாடி... முழங்கும்
திருப்புகழால் வேண்டுவோர்க்குத் தீருமே துன்பம்
அருள்வழங்கி ஆதரிப்பான் அவன்.
சிந்தை திருப்புகழும் சென்னி திருவடியிற்
முந்தி விழுந்து முகம்வணங்கக்... கந்தன்
கவிபாடிக் கைதொழவும் காணும் படையிற்
சிவன்மகனை நாளும் சேர்.
உள்ளம் உருகிடவே உன்மத்தம் ஏறிடவே
அள்ளி மனம்பருகும் ஆவலினால்... மெள்ளக்
கனிந்தின்பங் கொண்டிடவே கந்தனைக் காண
முனைந்துமுகம் சேரவே முந்து.
அன்னை முருகனவன் அப்பன் குமரனவன்
என்னைத் தினமாளுந் தேசிகன்... நன்னெறியிற்
செலுத்திடும் தெய்வமவன் சீர்படை யாறும்
அலுக்குமோ என்றும் அகம்.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.