படித்துறை
மாலை நேரங்களில் படித்துறை மிக அழகு
நடுவே நிற்கும் குளக்கோபுரம் மீது படரும்
வெயில் மோதிக் கோபுர நிழல்
நீரில் விழுகிற போது!
மீன்கள் நீரினுள் சலசலத்து நீந்திச் சென்று
படர்ந்த படித்துறைப் பாசிகளைத் திண்ண
செதில்களை அசைத்து அசைத்து
என் முகம் காண வந்தது போல
ஒரு பாவனை!
குளித்துக் கரையேறிய ஒருவர் வழுக்கி
மீண்டும் குளத்தில் விழுந்த போது அடிவயிற்றில்
குபீரென்றச் சிரிப்பு வெடித்துக் கொண்டு எழும்!
மதிலின் மீது வளரத் தொடங்கும் அரசமரச் செடி
உச்சி கோபுரத்தில் வந்தமரும் “குனுகுனு”க்கும் மயில்நிறப் புறா
மெல்லப் படரும் இருள், குளிரும் காற்று
சிலுசிலுக்க வைக்கும்! ஒரு நொடி!
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.