காசுக்கே விற்றுவிட்டோம்!
நெல்விளையும் நல்வயலை நீர்தேக்கும் ஏரிகளைக்
கல்மண்ணாய் எண்ணும் கயவராகிப் -- பல்லிலித்தே
பேசும் குழந்தைகள்தம் பொன்வாழ்வின் வாய்மூடக்
காசுக்கே விற்றுவிட்டார் காண் !
நாட்டை அழித்திடுவர் நன்றாய்த் துயர்தருவர்
கேட்டை விதைத்திடுவர் என்றறிந்தே -- கூட்டாய்நாம்
கூசும் படிவாக்கை கூறுகட்டிக் கூவியே
காசுக்கே விற்றுவிட்டோம் காண் !
ஆட்சி அதிகார ஆணவப் போக்குதனைக்
காட்சியாய் நாளுமே கண்டபின்பும் -- மீட்சிக்குப்
பேசும் துணிவின்றிப் பேடியராய் மானத்தைக்
காசுக்கே விற்றுவிட்டோம் காண் !
மாடுகட்டிப் போரடித்தால் மாளாதென் றானைகட்டி
வீடு நிறைத்த விளைநிலத்தைக் -- கேடுசூழப்
பேசுகின்ற சந்ததியர் பேர்வாழ்வின் கூற்றாகக்
காசுக்கே விற்றுவிட்டோம் காண் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.