துளிப்பாக்கள்
இசைக்கச்சேரி கேட்டபடி
தூங்கிப் போகிறான்
சாலையோரப் பிச்சைக்காரன்.
*****
குபேரக் கடவுள்
அள்ளிக் கொடுக்கும் காசுகள்
சாலையில் வரைந்த சித்திரம்
*****
பொம்மையின் கண்களைத்
தடவிக் கொடுத்துப்பார்க்கும்
கண்ணிழந்த தாய்
*****
அழியாமல் இருக்கிறது
அழகிய வானவில்
குழந்தையின் ஓவியத்தில்
*****
வழிதவறி வந்தும்
அழகாக்குகிறது வீட்டை
வாசலில் வந்த சிட்டுக்குருவி.
*****
நல்ல உதடுகளுக்காகக்
காத்திருக்கின்றன எப்போதும்
புல்லாங்குழல் ஓட்டைகள்.
*****
இருந்தபடி இருக்கும்
படுக்கை வசத்தில்
அலமாரியில் புத்தகங்கள்.
*****
கரும்பலகையில்
ஆங்கிலம் எழுதிப் பழகும்
தமிழ் வாத்தியார்ப் பிள்ளை.
*****
தெருக்கள் தோறும்
முளைக்கின்றன சங்கங்கள்
சாதிகளின் பெயரால்.
*****
குளிர்பதனப் பெட்டி
திறந்தவுடன் மூடுகிறேன்
வீசும் துர்மணம்
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.