ஆசிரியரே நாட்டின் வேர்
கல்லாகச் சேர்த்தவரை வகுப்ப றையில்
களிமண்ணாய் விட்டவரைப் பொறுமை யாக
நல்லதொரு சிற்பமாக வடித்த ளித்தும்
நல்லதொரு உருவமாகப் பிடித்த ளித்தும்
நல்லவனாய் வல்லவனாய் மாற்றித் தந்தும்
நல்லவற்றைத் தீயவற்றை உணர வைத்தும்
மெல்லமெல்ல அறிவூட்டி உயர வைக்கும்
மேன்மையான ஆசிரியர்க் கீடு முண்டோ !
பள்ளிதனில் புடம்போட்ட தங்க மாகப்
பண்புதனை மனத்திற்குள் பதித்த தாலே
வெள்ளையனைக் காந்தியண்ணல் அகிம்சை தன்னில்
வெளியேற்றி உலகத்தை வியக்க வைத்தார்
கொள்ளையிட்டுச் சுரண்டுகின்ற தன்ன லத்தைக்
வ்கொண்டிடாமல் பொதுநலமே கொள்கை யென்று
கள்ளமில்லா நேருபோன்ற தலைவ ரெல்லாம்
கண்முன்னே நாடுயர்த்தி ஆட்சி செய்தார் !
உயர்வான குணந்தன்னைக் கடமை தன்னை
ஊட்டியூட்டி வகுப்பறையில் வளர்க்கா விட்டால்
அயர்வின்றி உழைக்கின்ற தொழிலா ளர்கள்
ஆக்கத்தை விதைக்கின்ற முதலீட் டாளர்
கயமையின்றி நாடுதன்னை உயர்த்து தற்கே
கண்முன்னே ஒருவருமே இருக்க மாட்டார்
வயலுழுது வளம்கொடுக்கும் உழவன் போன்று
வாழ்வளிக்கும் ஆசானே நாட்டின் வேராம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.