காலனும் இளைஞனும்!

இளைஞனின்
கண் முன்னே
காலன்
உயிரைப் பறிப்பதற்கு
இளைஞன்
வினவுகின்றான்
காலனிடம்
எப்பொழுதே
மரணம் விதித்துவிட்டாய்
இப்பொழுது
எதற்கு வந்தாய்.
ஆசையாசையாய்
அன்னையின்
அரவணைப்புக்காக
ஏங்கிய நிலையில்
குப்பைத் தொட்டியில்
முதலாவது மரணம்
கொடுத்தாய்.
பிறப்பிலும்
ஏற்றத்தாழ்வுகள்
விதித்த பொழுது
இரண்டாவது மரணம்
கொடுத்தாய்.
ஒவ்வொரு
உறவுகளும்
தேவைகளுக்காவே
கால் பந்தைப் போல
உதைத்து விளையாடினர்
அந்நிலையில்
வெற்றுக்காகிதம் போலவே
உணர்ந்தேன்.
அப்பொழுது அறிந்தேன்.
மூன்றாவது மரணத்தை
முத்தெடுத்தேன்…
தடையில்லா
கல்வி கற்க
விரும்பினேன்
பெரும்போராட்டம்
தழுவிய பொழுது
நான்காம்
மரணம் விதித்தாய்.
மனம் தேடிய
காதலியை
இல்லக்கிழத்தியாக
மணம் முடிப்பதற்கு
விலக்களித்தாய்…
விரும்பிய
வாழ்க்கையை
விரைந்து
முடிக்கும் முன்னே…
முடிவெடுப்பதில்
சுயசிந்தனையை
இழக்கச் செய்தாய்
தடுமாற்றத்தில்
ஐந்தாம்
மரணத்தை ஏற்படுத்தினாய்.
தகுதியில்லாதவன்
தகுதியானவனிடம்
வெகுமதியால்
வென்ற பொழுது
ஆறாவது
மரணம் விதித்தாய்…
பெற்றேர்களின்
உழைப்பில்
சுதந்திரமாக
சுற்றித் திரிந்தேன்
தனி மனிதனாய்…
சமூக நிறுவனமாய்
குடும்பத்தில்
இணைந்தேன்
பெற்றோர்களை
சிறைப் பிடித்தாள்
முதியோர் இல்லங்களில்
முழுமையான
மரணம் அடைந்தேன்…
காலனே !
உள்ளத்தில்
எண்ணிலடங்கா
மரணம் வகுத்து
விதித்தாய்…
ஏன்?
இந்தக் காலதாமதம்
காலனே
காலம் தவறி
கண் முன்னே
காட்சி தருகின்றாய்…
அனைத்தையும்
துறந்த நிலையில்
வெற்றுடலோடு
திரிகின்றேன்…
எடுத்துச்செல்
மெய்யினை…
இயற்கையாய்
மரணம் கேட்டால்
செயற்கையாய்
மரணம் ஈகின்றாய்
விபத்துகளில்.
காலனே !
யான்
இழந்ததை
எப்பொழுது
எனக்கு
மீட்டுத் தருவாய்…
மறு பிறவியிலோ?
என்வென்று
தெரியாத
அப்பிறவியில்
என் நிலையை
உணருவேனா?
என்னுடைய
எல்லா
எண்ணங்களையும்
ஏமாற்றினாய்…
அதனை
மரணம்
என்றழைப்பதா…
இல்லை
பரிசீலனையாய்
உணருவதோ?
மறு பிறவியில்
மானிடப் பிறவியாய்
கொடுப்பாய்…
முற்பிறவியை
அறியவில்லை
இப்பிறவியை
உணருகின்றேன்
மறு பிறவியைக்
கொடுக்கத் துணிகின்றாய்…
உனக்கோ
உயிரைப் பறிக்கும்
உபாயம் மட்டுமே
தெரியும்…
உயிரைப்
படைக்கும்
உபயம்
அறியமாட்டாய்…
எல்லோருக்கும்
இறப்பு என்பது
நியதி…
ஆனால்
கடவுளைக்
காண்பதற்கு
பல மதங்களைப்
பின்பற்றுவதோ...?
இளைஞனே,
விதியை
மாற்றுகின்றேன்
மீண்டும்
குழந்தையாய்.
வளமோடு வாழ்வாயாக…
- சி. இரகு, திருச்சி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.